Sunday, March 04, 2007

வானொலிக்கால நினைவுகள் - 1


வானொலியோடு எனது தொடர்பு எப்போது ஆரம்பமானது ?

ஆதி, அந்தம இல்லா அருட்பெருஞ் சோதியே என்று பாடலாம் போலத்தோன்றுகிறது. அவ்வளவு நீண்ட காலம். எங்கள் ஊரில் வானொலி பாடிய முதலாவது வீடு எங்கள் வீடு என்று பெருமையாகச் சொல்லிக் கொள்வோம்.

(வேறு யாரும் உரிமை கோரவில்லை என்பதுதான் உண்மை)

ஹிஸ் மாஸ்டர்ஸ் வொயிஸ் வானொலி. அக்கால அமைதியான இரவுகளில், வெகுதூரம் வரை கேட்கும். மாலையானதும், அப்பா வானொலியை பக்குவமாக கொண்டு வந்து முன் மேசையில் வைத்து, கார் பட்டறியோடு இணைப்பை ஏற்படுத்தி, குமிழ்களை முறுக்க, 'கற,புற" சத்தங்களிடையே மதறாஸ் 1, மதறாஸ் 2 எல்லாம் கடந்து திருச்சி நிலையத்தில் வந்து நிற்கும்.

அதுவும் மார்கழி மாதத்தில், இசை விழா காலமென்றால் கர்நாடகஇசை வெள்ளம் பாய்ந்தோடி வரும்.
முற்றம் முழுவதும் அண்டை, அயலார் கூட்டம்.

அம்மா குசினிக்குள் போய், போய் வந்து எல்லோருக்கும் தேனீர் உபசாரம் நடக்கும். நல்ல நாள் பெரிய நாள் வந்து விட்டால் வடை, மோதகம், கொழுக்கட்டையும் தேனீரோடு கூடவே வரும்.

திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளையின் நாதஸ்வரக் கச்சேரி, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கானாம்ருதம், சீர்காழி கோவிந்தராஜனின் தித்திக்கும் தமிழ் கீதங்கள் அங்கு, இங்கெலாம் நிறைக்கும். பேச்சொலிகள் அடங்கி, தலைகள் ஆடும்.

"ஆகா இதெல்லோ வாசிப்பு..மனுசியின்ரை குரல் தேன் தான்"

"கோடி கொடுத்தாலும் பெறும்."
இப்படி இடையிடையே விமர்;சனக் குரல்கள் கேட்கும்.

'கதையை விட்டிட்டு பாட்டைக் கேளுங்கோவன்"

அப்பாவின் ஆணையில் அவ்வொலிகளும் அடங்கி விடும். இரவு எத்தனை மணி வரை கச்சேரி நடந்தது என்பது அநேகமாக எனக்கு தெரியாமல் போய் விடும்.

முற்றத்தில் அப்படியே உறங்கிப் போய் -

'மேலெல்லாம் மண்--நித்திரை வந்தால் போய் படாதையன்"

அம்மா பேசிக்கொண்டே எனது மேல், காலெல்லாம் அப்பியிருக்கும் மண்ணை துடைத்து விடுவது கனவு போல இருக்கும். இப்படியாக அனேகமான மாலைப்பொழுதுகள் என்னைப் பொறுத்தவரையில் சங்கீதப் பொழுதுகளாக போயின.

இலங்கை வானொலி மிக அரிதாக, அக்காலத்தில் எங்கள் வீட்டில் ஒலிக்கும்.

ஆடிவேல் திருவிழா கச்சேரிகளின் நேர்முக அஞ்சல், நல்லூர் தேர், தீர்த்த நேர்முக வர்ணனை

இலங்கையர்கோனின் விதானையார் வீடு நாடகம்;.

இவைதான் அந்த விதிவிலக்குப் பெறும் நிகழ்ச்சிகள்.

முதல் இரண்டினுக்கும் சங்கீத அபிமானமும், சமய அபிமானமும் காரணம் என்றால், மூன்றாவதற்கு ஊர் அபிமானம் காரணமாக அமைந்தது.

விதானையார் வீட்டில் விதானையாராக நடித்த கே.சிவத்தம்பியும், வேலைக்காரனாக நடித்த கே.மார்க்கண்டனும் எங்கள் ஊரான கரவெட்டியைச் சேர்ந்தவர்கள் என்பது தான் அது.

இருவருமே நான் அப்போது படித்துக் கொண்டிருந்த விக்கினேஸ்வராக் கல்லூரியில் படித்தவர்கள் என்பது எனக்கு பெருமையாக இருந்தது.

அவர்கள் எனக்கு ஆதர்ஸ புருசர்கள் ஆகியது இதனால் தான்!

கார்த்திகேசு சிவத்தம்பி ஓரு பீ.ஏ பட்டதாரியாக கொழும்பு சாஹிராக் கல்லூரியில் ஆசிரியராக இருந்த காலம் அது.

எனது சிறிய தந்தையாரின் பால்ய நண்பனாக இருந்த காரணத்தினால், ஊருக்கு வரும் போதெல்லாம் எங்கள் வீட்டிற்கு வருவதுண்டு. அவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்பேன்.

அவர் பேசுவதை உற்றுக் கேட்டு, 'சரியாக அந்த விதானையார் மாதிரியே பேசுகிறாரே" என்று வியந்து கொண்டிருப்பேன்.

நீண்ட காலத்துக்கு பிறகு, இதேமாதிரியான கேள்விகள் என்னிடமே கேட்கப் பட்ட போது

'என்னண்ணை சும்மா கதைக்கிற நேரமும் தணியாததாகம் சோமு மாதிரியே கதைக்கிறீங்கள்"

நான் நினைத்தது அப்போது ஞாபகத்திற்கு வரும்.

அந்த வானொலி நடிகர்தான் -

தற்போது உலகளாவிய அளவில் தமிழ் கலை பண்பாடு, நாடகம் போன்ற துறைகளில் பாண்டித்யம் பெற்றவராக, இலக்கிய சர்ச்சைகள் எழும் வேளைகளில் இறுதி அபிப்பிராயம் கூறும் தகுதி படைத்தவராக விளங்கும் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி என்பது உங்களுக்கு இந்தளவில் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

அடுத்தவரான கே.மார்க்கண்டனின் தந்தையார், தனது மகனின் நடிப்பை கேட்டு ரசிப்பதற்காகவே எங்கள் வீட்டிற்கு வருவார். தனது மகனை பாராட்டி யாராவது ஒரு வார்த்தை சொல்ல மாட்டார்களா என்ற எதிர்பார்ப்புடன் அவர் இருப்பார்.

யாரும் வாயே திறக்கமாட்டார்கள். இருந்து பார்த்து விட்டு, 'என்னுடைய மகன் மாதிரி நடிக்க இங்கை யார் இருக்கினம்" தனக்குத் தானே சொல்லிக் கொண்டு சென்று விடுவார். அவரது ஆதங்கம் எனக்கு இப்போது புரிகிறது.

கே.மார்க்கண்டன் ஒரு அற்புதமான வானொலி நடிகர் என்பதில் எனக்கு பூரண உடன்பாடு உண்டு.

இவ்வாறு இந்த இரு கலைஞர்களின் பாதிப்பு ஒரு பக்கமிருக்க, எனது அப்பாவின் இயற்கையான நகைச்சுவை உணர்வும், கலை ஆர்வமும் என்னை கலைப்பாதையில் செல்ல தூண்டிய காரணிகளாயின.

தென்னிந்தியப் பத்திரிகையான குங்குமம் ஆண்டு மலருக்காக என்னை பேட்டி கண்டு, எனது கலைவாழ்வின் தொடக்கத்தைப் பற்றி கேட்ட பொழுது இதையே பதிலாக சொன்னேன்.

கல்லூரி காலத்திலும், வெளியிலும் இரண்டொரு மேடை நாடகங்களில் நடித்து விட்டு, 1966ல் கொழும்பில் வேலை கிடைத்து, புகையிரதம் ஏறும்போதே வானொலிக் கனவுகளும் கூடவே என்னுடன் வந்தன.

கொழும்பி;ல் வேலை ஏற்ற பின்னர் நான் செய்த முதலாவது காரியம், எனது ஆதர்ஸ புருசர்கள் இருவரையும் தேடிப் புறப்பட்டதுதான். மார்க்கண்டனை சந்திக்க முடியவில்லை.

சிவத்தம்பியை வெள்ளவத்தையில் அவரது அறையில் சந்தித்து வானொலி நடிகனாக வர சிபார்சு ஏதாவது செய்ய முடியுமா என்று கேட்டதாக ஞாபகம். அவர் சொன்ன பதில் அப்போது ஏமாற்றத்தை தந்தாலும் மிகச் சரியானதென பின்னர் உணர்ந்தேன்.

'எனது சிபார்சு உனக்கு சிலவேளைகளில் பாதகமாகவும் அமையலாம். நீயே நேரடியாக வானொலி நிலையத்திற்கு விண்ணப்பம் அனுப்பி, உனது முயற்சியினால், திறமையினால் நல்ல நடிகன் என்பதை நிரூபிக்க வேண்டும். அதன் பின்னர் யாராலும் உனக்கு தடை போட முடியாது."

பல ஆண்டுகளுக்கு பின்னர், ஒரு சந்தர்ப்பத்தில், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வெள்ளிவிழா என்று நினைக்கிறேன்- சிறப்பு நிகழ்ச்சிகள் பல ஒலிப்பதிவு செய்தார்கள்.

காலம்சென்ற பேராசிரியர் கணபதிப்பிள்ளை எழுதிய வடமராட்சிப் பேச்சு வழக்கில் அமைந்த 'உடையார் மிடுக்கு" என்ற நாடகம். என்னுடன் கூட நடித்தவர்கள் யார் என்று நினைக்கிறீர்கள் ?

பேராசிரியர் கா.சிவத்தம்பி(மிக நீண்டகால இடைவெளிக்குப் பிறகு இவர் நடித்த முதல் வானொலி நாடகம். இதற்கு பிறகு நடிக்கவில்லை என்று நினைக்கிறேன் ).

கே.மார்க்கண்டன், கூட நடித்த மற்றக் கலைஞர்.

போராசிரியர் பழையதை நினைவுபடுத்தி-

'பாலா உன்னுடைய திறமை உனக்கு மற்றவர்களின் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்துள்ளதைப் பார்க்க சந்தோசமாக இருக்கிறது" என்று சொன்னார்.

இந்நேரத்தில் எனது கலைப்பாதையில் அவ்வப்போது பலர் காட்டிய அக்கறை எனது வளர்;ச்சிக்கு காரணமாக அமைந்ததை குறிப்பிடத்தான் வேண்டும்.

நான் வேலைக்குச் சேர்ந்த உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திலே இலங்கை வானொலியோடு தொடர்பு உடையவர்கள் சிலர் இருக்கிறார்கள் என்ற செய்தியே எனக்கு தித்திப்பாக இருந்தது.

இலங்கை வானொலியில் செய்திகள் வாசிப்பவராக இருந்த எஸ். நடராஜ ஜயர், கலைஞர் எஸ்.எஸ். கணேசபிள்ளை, . கலைஞர். ரி. ராஜேஸ்வரன் ஆகியோர் அப்போது இறைவரித் திணைக்களத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள்.

என் கலை வாழ்வின் முக்கிய திருப்பங்களுக்கு காரணமாக இருந்தவர்களில் இவர்கள் முக்கியமானவர்கள்.


(இன்னும் இருக்கிறது)

5 Comments:

At 3:00 AM, Blogger கானா பிரபா said...

தேவையான பதிவு அண்ணா தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றேன்.

 
At 3:48 PM, Blogger கரவையூரான் said...

நன்றி கானா பிரபா.. என்னுடைய வானொலிக்கால நினைவுகளை தொடர்ந்து எழுதுவதாகத்தான் இருக்கிறேன்.

 
At 5:01 AM, Blogger சின்னக்குட்டி said...

வணக்கம் பாலசந்திரன் அவர்கட்கு.... தொடர்ந்து எழுதுங்கோ. வாசிக்க ஆவலாக உள்ளோம் நன்றிகள்.

 
At 2:38 AM, Blogger பாரதிய நவீன இளவரசன் said...

பால்யகால அனுபவங்களை சொல்வதிலும் வாசிப்பதிலும் உள்ள மகிழ்ச்சி அளப்பறியது. தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. மேலும் தொடர்வதாய்ச் சொல்லியிருப்பது எனக்கு மகிழ்ச்சியைத்தருகிறது...காத்திருக்கிறேன்.

 
At 11:01 PM, Blogger கரவையூரான் said...

அன்பின் சின்னக்குட்டி, Bharateeyamodernprince,
இருவருக்கும் என் நன்றி. உலக கிரிக்கற் போட்டிகள் பார்க்கும் ஆசையில் உங்கள் பின்னூட்டங்களை உடன் பார்க்கத் தவறிவிட்டேன். என் அனுபவங்களை தொடர்ந்து விரைவில் எழுதுகிறேன்.

 

Post a Comment

<< Home